Wednesday 20 March 2019

உலக தண்ணீர் தினம்

                                                மார்ச் 22 
                                       நீரை காப்போம் 
                                                    நம் வாழ்வை காப்போம் 




Friday 15 March 2019

காமாட்சி



எதிர்த்த வீட்டு மூன்று வயது பெண்ணின் பொம்மையை உடைத்து விட்டான். “என்ன டா செஞ்ச?”

மௌனமாக நின்றான் இவன். அழுது கொண்டே இருந்தாள் அவள்.

“ஒன்னும் இல்ல காமாட்சி. தம்பி, பாப்பாவோட  விளையாட்டு சாமானையெல்லாம் உடைச்சுட்டான். ஆம்பள புள்ளல அதான் பந்து வெச்சு விளையாடிருக்கான். இதோட மண்பானை பாத்திரம் உடைஞ்சு போச்சாம்”.

“அட பொல்லா பயலே. உன்ன விட ரெண்டு வயசு சின்ன புள்ள. அத அழ உடுறியே”  என்று அடிக்க கையை ஓங்கினாள் காமாட்சி. லேசாக தலையில் தட்டி “போ, போய் அந்த தெருவுல விளையாடு”.

“பாப்பா! அத்தை கடைக்கு போனா சட்டி வாங்கித்தாரேன். சரியா”.

வீட்டுக்குள் இருந்து கேட்டபடி அவனது அப்பா செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார்.

“என்னத்த தான் படிக்கறானோ நாற்பதும் அம்பதும் வாங்கறான். அடுத்த வருஷம் ஆறாம் வகுப்பு. அங்க  எப்படி சமாளிப்பான்?  இவன உன்னால அதட்டி படிக்க வைக்க முடியாதா?”

வீடே இடிந்துவிடும் சத்தத்துடன் அப்பா கத்தினார். கோபத்துடன் கையில் ஒரு கரண்டியை எடுத்துக்கொண்டு காமாட்சி அறைக்குள் சென்று கரண்டிக்கு வலித்துவிடுமோ என்பது போல அவன் முதுகில் ஒன்று வைத்தாள். அரை மணி நேரம் அவளது வசை பாடும் சத்தம் அடுப்பங்கறையில் கேட்டது. வீடியோ கேம் சத்தம் மெல்லிதாய் அறைக்குள்ளிருந்து கேட்டது.

“பதினஞ்சு வயசாவுது. ஸ்கூல் பீஸை தொலைச்சுட்டேன்னா என்ன அர்த்தம்? அவ்வளவு என்ன அலட்சியம்?” என்ற அப்பாவின் கதறல்.

“விளக்கமாத்த எடுத்து ரெண்டு வச்சு வளத்துருக்கணும்” என்று ஆரம்பித்தது அம்மாவின் பிதற்றல். காமாட்சிக்கு கையில் கரண்டி கூட இல்லை. வாய் பேச்சு மட்டும் தான் இந்த முறை.

அன்று இரவு அவன் பேண்டினுள் இருந்த இரண்டு நூறு ருபாய் தாள்களை அப்பா பார்த்தார். “உள்பாக்கெட்டில் மறச்சு வெச்சுருக்கான். முன்னூறு ரூவா செலவாயிட்டு போல”  என்று வெளியே எடுத்து காட்டினார்.

“அதுலயே வைங்க. எல்லாம் சரியாயிடும்.”

காமாட்சியை முறைத்துவிட்டு  உள்ளே படுக்கைக்கு சென்றார்.

வீதி முழுவதும் ஒரே இரைச்சல். “அவனலாம் செருப்பால அடிக்க வேண்டாமா!”

“இவனலாம் ரோட்டுல ஓடவிட்டு கொல்லனும் சார்”

“இந்த மாதிரி புள்ளய பெத்ததுக்கு அவங்க அம்மா அப்பா தான் தூக்குல தூங்கணும்”

“இந்த ஆளெல்லாம் வாத்தியாரா இருந்தாராம். நாக்கை பிடுங்கிட்டு சாகலாம்”

வெளியே வந்தவர் “இங்க பாருங்க எதுவா இருந்தாலும் கோர்ட்ல தீர்ப்பு வரட்டும். இப்போ தான விசாரணைக்கு வந்துருக்கு. அதுக்குள்ள நீங்களே ஏதேதோ பேசினா எப்புடி?”

“அவன் இந்த தெருவுக்குள்ள கால எடுத்து வெக்கட்டும். அவன் கால உடைக்குறோமா இல்லையானு பாருங்க”

“அவனுக்கு இருபது வயசுதான் ஆகுது” என்று கூற எண்ணியவரின் குரல் உடைந்தது.

கண்களை துடைத்து விட்டு காமாட்சி வெளியே வந்தாள்.

“ஏங்க உள்ள வாங்க”.  அவரது நண்பர்கள் அவரை உள்ளே அழைத்து சென்றனர். காமாட்சி உள்வாசலருகில் நின்று கொண்டு வெளியே பார்த்தாள்.

அங்கு கூடி இருந்த ஆர்பாட்டக்காரர்களை நோக்கி “இப்படி ஒரு புள்ளயே எனக்கு இல்லனு வெச்சுக்கோங்க”. சலசலப்பு மெதுவாக குறைந்தது.

“ஒரு புள்ளய ஒழுங்கா வளக்கறது தான் பெத்தவங்க கடமை. எங்களால முடிஞ்சவரை நல்லவனா தான் வளத்தோம். அவன் சகவாசம் சரி இல்லை. அவனுங்கள மட்டும் சொல்லி என்ன பிரோயோஜனம்? இவன் புத்தி எங்க குப்பை மேய போச்சா! அவனை கல்லால அடிச்சாலும் சரி, இதே வீட்டு வாசல்ல கொன்னு புதைச்சாலும்  சரி, நாங்க ஏன்னு கேக்க மாட்டோம்” என்று கூறி விட்டு உள்ளே வந்தார்.

அதிர்ச்சியுடன் அவனது அப்பா அங்கே நின்றுகொண்டிருந்தார்.

“காமாட்சி” என்றார்.

“என் புள்ள தப்பு செஞ்சானானு நான் பாக்கலேங்க. அவன் கொலையே பண்ணிட்டு வந்துருந்தாலும் நான் என் உயிரை கொடுத்து அவனை காப்பாத்திருப்பேன்.  ஆனா பொம்பள புள்ளைங்கள தப்பா படம் எடுக்கணும்னு நெனைக்குற ஒவ்வொரு பயலுவளுக்கும் என் வார்த்தை செருப்படியா இருக்கணும்” என்று கூறி “வாங்க வந்து காப்பிய குடிங்க” என்றாள் காமாட்சி.



-ஷங்கமித்ரா

Wednesday 6 March 2019

உலக மகளிர் தினம் ஆரம்பித்த ஆண்டு எது?






 நியூ யார்க் நகரத்தில் 1909 ஆம் ஆண்டு தெரசா மல்கில் என்னும் அம்மையார் பெண்களின் ஊதிய உரிமைக்காக போராடினார். பின்னர் சோசியலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அவரது கருத்தின் படியே அமெரிக்காவின் சோசியலிஸ்ட் கட்சி,தேசிய மகளிர் தினத்தை’ தொடங்கியது. பின்னர் 1910ல் சர்வதேச சோசியலிஸ்ட் மகளிர் மாநாட்டில் மகளிர் தினத்தை குறித்து பேசப்பட்டு 17 நாடுகளில் இருந்த 100 பெண்களால் அங்கீகரிக்கப்பட்டது. இதில் ஆண்களுக்கு சமமான ஓட்டுரிமை / வாக்குரிமை வேண்டும் என்ற குரலும் உயர்த்தப்பட்டது. 1911ல்சர்வதேச மகளிர் தினம்’ அங்கீகரிக்கப்பட்டது. பல நாடுகளில் தொழிலில் பாலின பாகுபாடு கூடாது என்றும், ஊதிய உயர்வு வேண்டும் என்றும், சம ஓட்டுரிமையும் தேர்தலில் போட்டியிடும் உரிமையும் வேண்டும் என்றும் பெண்கள் கேட்டுக்கொண்டனர்.
பல நாடுகளில் பெண்கள் தங்களது பலவிதமான கோரிக்கைகளை முன் வைத்தனர்.  
1913ல் ரஷ்ய பெண்கள் சர்வதேச மகளிர் தினத்தை அனுசரிக்க தொடங்கினர். 1914ல் ஜெர்மனியில் மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது. சம-வாக்குரிமை கோரப்பட்டது. ஆனால் 1918ல் தான் அந்த உரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டது.
1917இல் ரஷ்ய நகரான பெட்ரோகிராட்டில் பெண் ஜவுளி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதுவே ரஷ்யாவின் இரு மாபெரும் புரட்சிகளின் ஒன்றான பிப்ரவரி புரட்சியின் வித்தாகும். மேலும் அதே நாளில் செயின்ட்ப்பீட்டர்ஸ் பெர்க் இல் பெண்கள்பிரட் அண்ட் பீஸ்” என்னும் புரட்சியை தொடங்கினர். முதலாம் உலகப்போரால் பஞ்சம் வந்ததை எதிர்த்து அப்போரினை நிறுத்த வேண்டினர். அதனாலே அமைதியும் உணவும் வேண்டும் என்று வலியுறுத்தி புரட்சியில் பெண்கள் ஈடுபட்டனர் மேலும் எதேச்சாதிகாரத்தை விட்டு மக்கள் ஜனநாயகம் அமைக்க வித்திட்டது
Bread and peace புரட்சி
பெண்களால் எவ்வளவு அறிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.
இன்றைய தினத்தில் சுமார் இருபத்தியேழு நாடுகளில் மகளிர் தினமானது விடுமுறை நாளாக அனுசரிக்க படுகின்றது. 1911 இல் தொடங்கிய சர்வதேச மகளிர் தினம், 2011ல் நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட்டது.  ஒபாமாவின் உந்துதலால்  அமெரிக்காவில்மகளிர் வரலாற்று மாதமாக’ மார்ச் மாதத்தை கொண்டாடினர். அதே நேரம் செஞ்சிலுவை(redcross) மாநாடு, உலகத்தில் நடக்கும் பெண்களின் வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும் என்று கோரினர்.
ஆஸ்திரேலியாவில் 100 ஆண்டுகளை கொண்டாடஇருபது சென்ட்’ நாணயம் வெளியிடப்பட்டது.
இதே நாளன்று எகிப்தில் ராணுவ ஆட்சியை எதிர்த்து நூறு பெண்கள் போராட்டத்திற்காக தெருவில் இறங்கினர். சில ஆண்களும் இவர்களின் பாதுகாப்பிற்காக வந்தனர். போராட்டத்தை கலைக்க எண்ணி துப்பாக்கி சூட்டில் காவலர்கள் இறங்கினர். பல பெண்களை அடித்து விரட்டினர். போராட்டத்தில் நான்கு பேரை காவலர்கள் சுட்டு கொன்றனர். ஒரு பெண்ணின் மேலாடையை கிழித்து அவளை அடிக்கும் காட்சி பல நாடுகளுக்கு ஒளிபரப்பாக, பல நாட்டினரும் இந்த நிகழ்வை எதிர்த்தனர்.
எகிப்திய தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆனால் அந்த நாட்டு தலைமையகம் தீய சக்திகளை எதிர்த்ததாகவே கருத்து தெரிவித்தது. 
இதே ஆண்டில் நம் பாரத மண்ணில் வாழ்ந்த, வாழும் பெண்களை உயர்த்தி நாம் போற்றிக்கொண்டு இருந்தோம். கல்பனா சாவ்லா, நிகோல் (மிஸ் எர்த் 2010), கர்ணம் மல்லேஸ்வரி, ஹம்பி கோனேரி (பதினைந்து வயதில் 2002 இல் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனவர்) என பல பெண்களை நாம் கொண்டாடிக்கொண்டிருந்தோம். 2012 டிசம்பரில் நிகழ்ந்த, நாட்டையே உலுக்கிய நிர்பயா சம்பவமும் அதை போன்று மறைக்கபட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்களும் நம் நாட்டில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. மகளிர் தினமன்று அவர்களை நாம் போற்றி புகழவில்லை என்றாலும் தீமை செய்யாமல் மனதிலேனும் உயர்த்துவோம்.
2019ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தின வாசகம்
Think Equal, Build Smart, Innovate for Change
இதனை பின்பற்றி மாபெரும் மாற்றத்தினை இந்த வருடம் எதிர்பார்க்கும்

-ஷங்கமித்ரா

Monday 4 March 2019

சிவராத்திரியின் ஆதி காரணம் என்ன?



- உலகையே அதிர வைத்த அந்த தினம் எது?
மேரு என்னும் மந்தார மலையை ஆதிசேஷன் பெயர்த்து வந்து பாற்கடலில் வைத்து, மலையை மத்தாக்கினான். மத்தை கடைய கயிறு வேண்டுமே! அடர்த்தியான மலை மத்தாகும் பொழுது கயிறாக வாசுகியை பிடித்து பாற்கடலை கடையத் தொடங்கினர் ஒரு புறம் தேவர்களும் மறு புறம் அசுரர்களும், அமிர்தம் பெற கடையத்தொடங்கினர். அப்பொழுது பலம் குறைந்திருந்த தேவர்களை காட்டிலும் அசுரர்கள் பலவான்களாக இருந்தனர். அதனால் தேவர்கள் வாசுகியின் வால் பகுதியையும் அசுரர்கள் தலை பகுதியையும் இழுத்தனர்.
பாற்கடலை  கடையத்தொடங்கி இருபுறமும் இழுக்க மலை நிலை கொல்லாது ஆடத்தொடங்கியது. மலையின் இந்த நிலையால் வாசுகி உடல் துடிதுடித்தது. தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று இதற்கொரு தீர்வு கேட்க அவர் ஆமையின் உருவமாக மாறி தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரமான கூர்மாவதாரத்தை எடுத்தார்.

இந்திரன் மந்தாரமலையை ஆமைவடியான விஷ்ணுவின் முதுகில் தூக்கிவைத்தான். மலை நிலைகொண்டு நிற்க மறுபடியும் கடலை கடைத் தொடங்கினர். அனந்தசேஷன் தேவர்களின் பக்கம் நின்று வாசுகியை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாக இருந்தான். உராய்வின் காரணமாகவும் வலியின் காரணமாகவும் வாசுகி வாயிலிருந்து நெருப்பு, கரும்புகையுடன் வெளிப்பட ஆரம்பித்தது. அந்த புகை மேகமாகி, இடி மின்னலும் கூடிய மழையை பெய்யச்செய்தது. அது கலைத்துப்போன தேவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. மந்தார மலையில் இருந்து விழுந்த பூக்களும் உற்சாகத்தை கொடுத்தன. கடலின் ஆழத்தில் இருந்து கடுமையான உறுமல் கேட்டது. கடல்வாழ் மிருகங்கள் நீரின் சுழற்சியால் உயிரை விட்டன. மந்தார மலையின் மேலிருந்த மரங்கள் உராய்ந்து கொண்டு விழுந்ததால் பற்றிய நெருப்பு மலையில் வாழும் பல மிருகங்களை தீக்கிரையாகியது. மலை நெருப்பு பற்றி கருமேகமாய் காட்சியளித்தது. இந்திரன் மழையை வரவழைத்து நெருப்பை அடக்கினான்.
மலையில் இருந்து விழுந்த மூலிகைகளுடன் கலந்த கடல் நீர் பார்க்க நெய்யை போன்று காட்சியளித்தது. சில காலம் கடைந்து கொன்டே இருக்க, சந்திரன் பாற்கடலினின்று தோன்றினான். லட்சுமியும் சோமனும் வெள்ளைக்குதிரையான உஜ்ஜிரைவஸ், இருவெள்ளை தந்தங்களுடன் ஐராவதம், அமிர்தத்தை தாங்கிய தன்வந்திரி என்று பலவும் வெளிப்பட்டன.
இறுதியாக காலைக்குட நஞ்சு வெளிப்பட, மூன்று உலகங்களும் நடுங்கியது. படைக்கப்பட்டவற்றின் பாதுகாப்பிற்காக, பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவன் அந்த நஞ்சை எடுத்து விழுங்கினார். மஹேஸ்வரர் பார்வதியின் துணையால் அந்த நஞ்சை தனது தொண்டையிலேயே நிறுத்தினார். அது முதல் அவர் நீலகண்டன் என்று அழைக்கப்பட்டார்.
ஆலகால விஷத்தை சிவன் அருந்தினார். பார்வதி அனைத்திலும் பெரியது சிவம் என்று அறிந்தும் பதற்றத்தில் அவர் கழுத்தை இறுக்கப்பற்றினார். விஷமானது அவர் தொண்டயில் நின்றது. விஷமருந்தியவர் அன்றிரவு உறங்குதல் ஆகாது என்றும் சிவனின் இந்த அளவிலாத தியாகத்தை போற்றியும் அன்று இரவு முழுவதும் தேவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதுவே மஹாசிவராத்திரியாக கொண்டாடப்படுகின்றது. இதனாலேயே சிவராத்திரி அன்று அவர் பக்தர்கள் அவர் துதி பாடி தூங்காமல் அவரை வழிபடுவது வழக்கம்.
 வாசுகியையும் விஷத்தையும் தன் கழுத்தில் நிறுத்தினார் சிவபெருமான். இது மனிதர்கள் தீயவற்றை தனக்குள் செல்லவிடாது நிறுத்தவேண்டும் என்று உணர்த்துகின்றது.


தேவர்கள் ஏன் பலமில்லாமல் இருந்தனர்? இதனை அறிய தொடர்ந்து இங்கே இணைந்திருக்கவும்.


நாகபுராணம்   - ஷங்கமித்ரா

Tuesday 26 February 2019

அய்யர் வீட்டில் திருட்டு(short story 3)

வீட்டுக்கதவை நான்கு முறை ஒரே மாதிரி தட்டும் சத்தம் கேட்டது. மெதுவாக கதவை திறந்து “சொல்லு” என்றான்.
“மூணாவது தெரு நாலாம் நெம்பர் ஊடு “
“சரி” என்று கூறி கதவை சாத்திவிட்டுக் கிளம்பினான்.
வீட்டை பூட்டும் முன் கண்ணாடியில் முகத்தை பார்த்துக்கொண்டான். நெற்றியில் தோல் நிறமே தெரியாத அளவு விபூதி பட்டை. தனக்கு தன்னையே அடையாளம் தெரியாத விதம் எண்ணெய் தடவி படிய வாரிய தலை. வேஷ்டிக்குள் இருந்த பட்டி போட்ட டிரௌசர் பாக்கெட்டடுக்குள் கையை விட்டு ஒரு முறை பொருட்களை சரி பார்த்துக்கொண்டான். கதவை பூட்டி விட்டு ஜன்னலை திறந்து மறுபடி வீட்டுக்குள் சென்றான். ஜன்னலை உள்ளிருந்து அடைத்து விட்டு, பின்கதவு வழியாக வேகமாக நடந்தான். கால் மணி நேர நடை. அப்படியே ஓடும் பஸ்ஸில் தொற்றிக்கொண்டு மூன்றாவது நிறுத்தத்தில் இறங்கினான். அங்கிருந்த மணிக்கூண்டில் நேரத்தை பார்த்து விட்டு, எடுத்து வந்த பொருட்களில் சிலவற்றை சட்டை பையில் போட்டுக் கொண்டு வேகமாக நடந்தான்.
அக்ரஹாரம். அந்த தெருவில் வெயில் நேரத்தில் மக்கள் பலர் வெளியே வருவதில்லை. சிலர் சாப்பிட்டுவிட்டு உறங்கிக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் தெருவில் நடந்தனர். ‘யாரும் தன்னை கண்டுகொள்ளவில்லை’ என்று உறுதி செய்துகொண்டு நாலாம் எண் வீட்டுக்குள் செல்ல ஆயத்தமானான்.
தன் கூட்டாளி கூறியதாவது “அய்யரும் மாமியும் ஊருக்கு போய் கீறாங்கோ. பாட்டி துண்ட்டு தூங்குற நேரம். நீ கதவை வெளில சாவி போட்டு தொரந்துனு, உள்ள போய் ஒன்னு ரெண்டு சாமான மட்டும் உசார் பண்ணு. பாட்டி கத்துச்சு மண்டையிலே கத்திய எறக்கிடு”.
இந்த தேர்வில் வெற்றி பெற்றால் தான் தன்னை சங்கத்தில் சேர்த்துக் கொள்வார்கள். கதவை திறப்பதற்காக சட்டைப் பையிலிருந்த கம்பியை எடுத்து கதவில் கை வைத்தான். வைத்ததும் மெல்ல கதவு ‘கோய்ங்’ என்ற சின்ன சத்தத்துடன் திறந்தது. முதுகெலும்பில் வியர்வை வழிந்தோடியது. ‘அப்டியே பின்னால ஓடிறலாமா இல்ல’ என்று எண்ணிக்கொண்டே தெருவை சுற்றி பார்த்தான் யாரும் இல்லை. செல்ல மனம் இல்லாமல் தன் பார்வையை உள்ளே அனுப்பினான். எந்த சத்தமும்  உள்ளிருந்து வரவில்லை.
“அய்யரு வெளில பூட்டிட்டு போவாருனு சோடங்கி சொன்னானே. முனீஸ்வரா நீ தான் என்ன வாழவெக்கணும்” என்று எண்ணிக்கொண்டே உள்ளே நுழைந்தான். கண்களை சுழற்றிப் பார்த்தவன் நெஞ்சம் அந்த நொடியே வெடித்திருக்க வேண்டும். தூணில் சாய்ந்து கொண்டு பாட்டி இவனையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். கண்களில் கண்ணாடி, கையில் பாக்கு இடிக்கும் குவளையும் குழவியும். உறைந்து நின்றவன் காதில் யாரோ குறட்டை விடும்  சத்தம் கேட்டது. உற்று பாட்டியின் அசைவில்லாத உடலை கவனித்தான். கண்ணாடிக்கு பின் இருந்த கண்கள் மூடி இருந்தன. “அடச்சீ பாட்டி தூங்குது” என்று எண்ணிக்கொண்டே பெருமூச்சு விட்டான்.
அவன் மூச்சு முழுவதுமாக வெளியேறும் முன் “யாரு அது” என்று தூரத்திலிருந்து வந்த  சத்தம் அவன் இடது புறத்திலிருந்து கேட்டது. அவன் எடுத்து வந்த கத்தியால் அவன் நெஞ்சை யாரோ கிழித்தது போல உணர்ந்தான். அந்த அகலமான வீட்டின் கோடியில் இருந்த அடுப்பங்கரையில் மாமி நின்று கொண்டு குரல் கொடுத்தார். அது மாமி என்று தெரிந்ததே தவிர முகம்  சரியாகத் தெரியவில்லை. இப்படியே புடரியில் பின்னங்கால் பட ஓட எண்ணினான்.  “டேய் அம்பி, உள்ள பீரோ பக்கத்துல அஞ்சு ரூபா இருக்கும். எடுத்துட்டு போய் அவரைக்கா வாங்கிட்டு வந்துரு” என்று சத்தமாக கூறிவிட்டு அடுக்கலைக்குள் நுழைந்து விட்டாள். “விஷேஷ வீட்டுல சாப்பிடலாம்னு போனா பாதியிலே ‘வேலை இருக்குனு’ இழுத்துட்டு வந்துட்டார். இப்போ கறியை சமை கூட்டை சமைனு சொன்னா நான் என்ன பண்ணறது? மணி மூனாக போகுது. இருந்த சாப்பாட்டையும் சாப்பிட்டுட்டு அம்மா உக்காந்துருக்கா” என்று புலம்புவது காதில் கேட்டது.
“வெறுங்கையோட வந்த, கூட்டத்துல சேத்துக்க மாட்டோம். புரியுதா?” என்று தலைவர் மிரட்டிய வார்த்தைகள் காதில் ஒலித்தன.
‘தன் புலம்பலைத் தாண்டி மாமி இங்கே ஓடி வந்து தன்னை கையும் களவுமாக பிடிக்கமாட்டார்’ என்று தன்னை தானே தேற்றிக் கொண்டே சுற்றி பார்த்தான் பீரோ இருக்கும் அறையை நோக்கி, விதியை ஆண்டவன் மேல் போட்டு நடந்தான் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட எண்ணினான்.
மெல்ல அறைக்குள் நுழைந்தான். அதன் கதவு உள் பக்கமாக திறந்திருந்தது. இடது புறம் பீரோ இருந்தது. ஒரு அடி உள்ளே வைத்ததும் தான் கவனித்தான் கதவின் மறைவில் வலது புறம், நாற்காலியில் அய்யரு உட்கார்ந்திருந்தார். உறைந்து போனவனாய் செய்வதறியாது நின்றான்.
“அம்பி அந்த கால்குலேட்டர் பீரோ உள்ள இருக்கு பாரு. எடு” என்று அய்யரு கூறிய வார்த்தைகளில் மீண்டும் உயிர்ப்பித்து வந்தது போல தடதடவென்று பீரோவை திறந்து கால்குலேட்டரரைத் தேடினான்.
‘நான் ஜெயிலுக்குப் போகும் முன் இந்த கால்குலேட்டரரையாவது எடுத்து குடுத்து என் வாழ்க்கையில் உருப்படியாக ஒரு வேலை செய்யப் போகிறேன்’ என்று எண்ணிக்கொண்டே தடதடவென அதனை தேடி, கையில் எடுத்து வந்து அய்யரிடம் நீட்டினான். அக்கௌண்ட்ஸ் புத்தகத்தில் ஆழ்ந்து இருந்த அவர் அவனை பார்க்காமலே கையில் வாங்கிக் கொண்டார். அவரது அடுத்த கட்டளைக்கு காத்துக்கொண்டு இரு வினாடிகள் நின்றான்.
தன் சுயநிலைக்கு சட்டென திரும்பியவன் விருட்டென அறையிலிருந்து வெளியேறினான்.
அய்யர் அவனை “டேய் அம்பி மேஜை மேல என் பர்ஸ் இருக்கு. அதுல சில்லறையை எடுத்துட்டு போடா” என்று குரல் கொடுத்தார். மேஜையை தேடும் அளவு அவனுக்கு பொறுமை இல்லை. தன் உயிர் தப்பித்தால் போதும் என்று எண்ணிக்கொண்டே ஓடத்தொடங்கினான். மேஜை பக்கத்திலிருந்து “மாமா” என்று அலறிய சிறுவனின் குரல் தன் செவிகளை செவிடனாக்கியது.
தன்னை இவ்வளவு அருகில் பார்த்த சிறுவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் “தம்பி வயித்து பசி அதான்” என்று மெல்லிய குரலில் நடுங்கிக் கொண்டே கூறினான். அய்யரின் மகன் பர்ஸை அவனிடம் நீட்டி “இந்தா மாமா, அப்பா பர்ஸு. எனக்கு ஒரு ரூபா குடு மாமா” என்றான் மெல்லிய குரலில். வெடவெடத்த நெஞ்சுடன் பர்ஸை வாங்கி நடு நடுங்கும் கைகளால் அதிலிருந்த அனைத்து   ருபாய் நோட்டுக்களையும் அந்த சிறுவனின் எடுத்துக் கொடுத்துவிட்டு என்ன செய்கின்றோம் என்று புரியாமல் பர்ஸை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக கதவருகே சென்றான்.  அவன் கால்கள் உணர்விழந்து இருந்தன. அடுக்களையில் இன்னமும் சமைத்து கொண்டு இருக்கும் மாமியை பார்க்கக் கூட நேரமில்லாதவனாய் ஓடினான். தான் மெல்ல மூடிவிட்டு வந்த கதவை திறக்க கை வைத்தவனை “டேய் விளங்கா மூஞ்சு” என்று பாட்டி அழைத்தாள். தூக்கத்திலிருந்து விழித்து விட்டாள் போலும்.
அவள் செய்த சத்தத்தில் ‘முனீஸ்வரா என் மூச்சு இந்த நிமிசமே நின்னுடக்கூடாதா’ என்று மனதுக்குள் அவர் காலில் விழுந்து அழுது புரண்டான். “கிளம்பிட்டியா டா. எங்க போற? அந்த ஜலத்தை எடுத்துக் குடுத்துட்டு போ. மாட்டுப்பொன்னா வந்தவ சொல்றத செய்யற. நான் சொன்னா செய்ய மாட்டியோ? இடி விழுந்த மாதிரி நிக்காத. விளங்காத பயலே” என்று கத்த தொடங்கினார்
‘ஜலாமா? அப்டின்னா என்ன’ என்று தெரியாமல் பாட்டி கை காண்பித்த முக்காலி மேஜையை பார்த்தான். “தண்ணி ஜாடி” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு
பதட்டத்துடன் ஜாடியையும் டம்பளரையும் பாட்டியிடம் நீட்டினான். பாட்டி நீட்டிய பாக்கு குழவியும் கண்ணாடியையும் வாங்கி மேஜையில் வைத்து விட்டு கிடு கிடு வென வெளியேறினான்.
அதுவரை ஐநூறு ருபாய் நோட்டுக்களை எண்ணிக் கொண்டிருந்த சிறுவன் “அம்மா என்கிட்டே பத்து ருபாய் இருக்கு” என்று கத்திக் கொன்டே அடுப்படிக்கு ஓடினான். அவன் கையிலிருந்த பத்து ஐநூறு ரூபாய் நோட்டுகளை பிடுங்கிய மாமி “டேய் ஏது இவ்ளோ பணம்” என்றாள்.
“அந்த மாமா கொடுத்தார்”
“எந்த மாமா” என்று கேட்டு கொண்டே சமையலறையிலிருந்து வெளியேறினாள்.
“கிட்டு அண்ணா தானே வந்தான்” என்றாள்.
“இல்ல அம்மா புது மாமா” என்று சிறுவன் கூற வீடே அடுத்த முப்பது நிமிடம் அல்லோலப்பட்டது.
“எல்லாம் பத்திரமா இருக்கு. சில்லறையோட பர்சை கூட முக்காலி மேல வெச்சுட்டு போய்ட்டான்” என்று பேசிப் பேசி அயர்ந்தனர்.


நடக்கும் பந்தயத்தில் முதலாவதாக வந்தவன் போல அங்கிருந்து நடந்து வந்தவன் தன் சங்கத்தை முப்பது நிமிடத்தில் அடைந்தான்.
அவ்வளவு தூரம் வந்தும் திரும்பிப் பார்க்க முடியாத பயத்தில் வெளிறிப் போய் தரையில் குத்துகால் வைத்து அமர்ந்தான்.
“அண்ணாத்த எங்க போய்ட்டிங்க” என்றான் சோடங்கி.

“டேய் நாயே என்னை இப்புடி மாட்டி விட பாத்தியே நீ. இன்னைக்கு அய்யரு ஊருக்கு. போகல”

“அய்யரு ஊட்டுக்கு நம்ம ‘ஜோரு ஜோசப்’ போயி ஒரு வெள்ளி கொலுசு போட்டுட்டு வந்துட்டான் பாரு. நீ தான் அந்த பக்கமே காணோம் பயத்துல பதுங்கிட்டியா என்ன ?” என்றான் சங்க தலைவர்.

“என்ன சொல்ற தலைவா நான் அய்யரு வூட்டுக்கு போனேனே. அங்க அய்யரு, மாமி, தம்மா துண்டு பய, ஒரு கெய்வினு எல்லாரும் என்ன சாவடிச்சுட்டாங்க. பேஜாரா போச்சு போ.”

“டேய் நீ எந்த ஊட்டுக்குடா போன?

“நாலாவது தெரு மூணாது ஊடு தான போனும்” என்றான் ஜோசப்.

சோடங்கியின் சட்டை. பிடித்து இழுத்து “டேய் நாயே என்னா இன்பார்மமேசன் குடித்த டா” என்றான்.

“அண்ணாத்த நான் தா மாத்தி சொல்லிட்டேன் போல” என்று தலையை சொரிந்தான்.

“அட கறுவா பயலே உன்னால நா பலியாவ கெடந்தேனே”

தலைவர் அவன் அருகே வந்து “உனக்கொண்ணும் பிரச்சன இல்லேயே” என்றான்.

“இந்த நாயால என் உயிர் போய் உயிர் வஞ்சு. இதோ இந்த வெத்து பர்ஸு தான் மிச்சம்” என்று கூறி சட்டை. பையிலிருந்து அதை எடுத்து கீழே போட்டான்.


“அய்யயோ நான் அப்போவே சொன்னேன். இந்த நியாயம் எங்கயாச்சும் உண்டோ கிழவி பெருமையா அத ஊர் பூரா காட்டிருப்பானு நெனைக்குறேன். அதை திருட ஒருத்தன்  வீட்டுக்குள்ள வந்துட்டான்” என்றார் மாமி.

“நீ மட்டும் என்னடி உள்ள போய் பீரோல காசு எடுக்க சொன்னவ தானே” என்றார் பாட்டி.

“உங்க பிள்ளை மட்டும் என்ன பீரோவையே தூக்கி குடுத்துட்டு நிக்கறார்”

“மூவரும் பேசிக்கொள்வதை சிறுவன் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான் அவனுக்கு பசி வயிற்றை கிள்ளியது.


சங்கத்தின் நடுவே சிதறிக் கிடந்த கண்ணாடிகளின் நடுவே அந்த தங்க பிரேம் தரையில் ஜொலி ஜொலித்துக்கொண்டிருந்தது.